Tuesday, 2 October 2012

ஆந்திராவில் பாத யாத்திரை துவக்கினார் சந்திரபாபு நாயுடு

ஐதராபாத்: ஆந்திராவில், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும், முன்னாள் முதல்வருமான, சந்திரபாபு நாயுடு, நேற்று, பாத யாத்திரை துவக்கினார். ஆந்திராவில், 2014ல், சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலில், தெலுங்கு தேசம் கட்சி, ஆட்சியைப் பிடிக்கும் வகையில், மக்களிடம் ஆதரவை திரட்டவும், அரசியலில் தனக்குள்ள செல்வாக்கை மீண்டும் நிலை நிறுத்தவும், அம்மாநில முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சித் தலைவருமான, சந்திர பாபு நாயுடு, நேற்று, மாநிலம் தழுவிய பாத யாத்திரையைத் துவக்கினார். தன் மாமனாரும், மறைந்த முன்னாள் முதல்வருமான, என்.டி.ராமராவ் போட்டியிட்ட தொகுதியான, ராயலசீமா பகுதியில் உள்ள, இந்துப்பூரில் இருந்து, பாத யாத்திரையைத் துவங்கியுள்ள சந்திரபாபு நாயுடு, 2,300 கிலோ மீட்டர் தூரத்திற்கு, 117 நாட்கள் பாத யாத்திரை மேற்கொள்கிறார். நாள் ஒன்றுக்கு, 20 கிலோ மீட்டர் தூரம் செல்ல திட்டமிட்டுள்ளார்; 13 மாவட்டங்களின் வழியாக யாத்திரை நடைபெற உள்ளது.

யாத்திரை குறித்து, சந்திரபாபு நாயுடு கூறியதாவது: மக்களின் நன்மையை கருத்தில் கொண்டே, இந்த பாத யாத்திரை மேற்கொள்ளப்படுகிறது. ஆட்சி அதிகாரத்திற்கு வரவேண்டும் என்ற, ஆசையில் அல்ல. எல்லா வகையிலும் தோல்வியை கண்ட, காங்கிரஸ் கட்சியின் ஊழல்களால், நாடு, தற்போது நெருக்கடியில் உள்ளது. இதுபோன்ற கால கட்டத்தில், மக்களுக்கு உறுதுணையாக நான் இருக்கிறேன் என்பதை தெரிவிக்கவே, இந்த பாத யாத்திரை. இவ்வாறு சந்திரபாபு நாயுடு கூறினார்.

No comments:

Post a Comment