Monday, 14 October 2013

ஆம்னி பேருந்துகள் பயணிகளிடம் தங்கள் வசூலைத் தொடங்கியுள்ளன-தீபாவளி பண்டிகைக்கு

இன்னும் 20 நாட்கள் இருக்கிற நிலையில், ஆம்னி பேருந்துகள் பயணிகளிடம் தங்கள் வசூலைத் தொடங்கியுள்ளன. சென்னை மற்றும் அதனைச் சுற்றி உள்ள பகுதிகளில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரிபவர்களில் பெரும்பாலோர், பிற மாவட்டங்களைச் சேர்ந்தோர். இவர்களில் கணிசமானோர், தீபாவளி பண்டிகைக்காக சொந்த ஊருக்கு செல்வது வழக்கம். இதனை பயன்படுத்தி ஒவ்வொரு ஆண்டும் தீபாவளியின் போது, பொதுமக்களிடம் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் அதிகப் பணம் வசூலிப்பது வழக்கம். அடுத்த மாதம் 2-ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் வரும் 30, 31 மற்றும் அடுத்த மாதம் 1- ம் தேதி ஆகிய நாட்களில் தெற்கு மற்றும் மேற்கு மாவட்ட பகுதிகளுக்கு செல்லும் ரயில்களில் முன்பதிவு முடிந்துவிட்டன. அதுபோல் அரசு விரைவு பஸ்களில் பயணிப்பதற்கான முன் பதிவுகளும் முடியும் தருவாயில் உ ள்ளன. இதைத் தொடர்ந்து ஆம்னி பேருந்துகள் இந்த ஆண்டும் பயணிகளிடம் அதிக கட்டணத்தை வேட்டையாட தொடங்கி விட்டன. இதுகுறித்து, சமூக ஆர்வலர் ஒருவர் தெரிவித்ததாவது: அரசு சொகுசு பேருந்துகளில் பயணிக்க திருச்சிக்கு ரூ.260, மதுரைக்கு ரூ.350, திருநெல்வேலிக்கு ரூ. 465, கன்னியாகுமரிக்கு ரூ.530, கோயம்புத்தூருக்கு ரூ.420 என, கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆனால், ஆம்னி சொகுசு பேருந்துகளில் திருச்சிக்கு ரூ.500, மதுரைக்கு ரூ.560, திருநெல் வேலிக்கு ரூ.630, கன்னியா குமரிக்கு ரூ.690, கோயம்புத்தூ ருக்கு ரூ.580 என, கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்த நிலையில், பிரபலமான ஆம்னி பஸ் நிறுவனங்களில், வழக்க மான பஸ்களில் தீபாவளிக்கான முன் பதிவு முடிந்துவிட்டது. இனி வாய்ப்பில்லை என்கிறார்கள். மற்ற நிறுவனங்களிலோ, சிறப்பு பஸ்கள் விட உள்ளோம். அதற்கு ஆ ன்-லைனில் முன் பதிவு செய்யுங்கள் என்கிறார்கள். ஆன்- லைன் முன் பதிவில் திருநெல்வேலிக்கு ரூ. 1200, திருச்சிக்கு ரூ.700, ரூ 1000 என்கிற ரீதியில் அதிக கட்டணம் வசூலிக்கிறார்கள். தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 20 நாட்கள் இருக்கிற நிலையில், பயணிகளிடம் அதிக கட்டணத்தை வேட்டையாட ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் இப்போதே தொடங்கிவிட்டார்கள். இதைத் தடுக்க போக்குவரத்துத் துறை உரிய நடவடிக்கையை எடுக்கவேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Tuesday, 8 October 2013

எம்.பி.பி.எஸ். முதலாம் ஆண்டில் 84 சதவீதம் பேர் தேர்ச்சி

தமிழகத்தில் எம்.பி.பி.எஸ். முதலாம் ஆண்டு தேர்வில் 84 சதவீத மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகள், சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் கடந்த கல்வி ஆண்டில் (2012-13) எம்.பி.பி.எஸ். முதலாம் ஆண்டு படிப்பில் சேர்ந்த 3,900-த்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் கடந்த ஆகஸ்ட் மாதம் தேர்வு எழுதினர்.
தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்தின் இணையதளம் www.tnmgrmu.ac.in-தேர்வு முடிவுகள் வியாழக்கிழமை (அக்.3) இரவு வெளியிடப்பட்டது.
முதலாம் ஆண்டு தேர்வில் 84 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். அரசு மருத்துவக் கல்லூரிகளில் படித்த மாணவர்களில் சராசரியாக 90 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
சென்னை மருத்துவக் கல்லூரி- கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரியில் தலா 89 சததவீதம், அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் 92 சதவீதம், மதுரை உள்ளிட்ட தென் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரிகளில் 90 சதவீதம் என மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர். சுயநிதி கல்லூரிகளில் படித்த மாணவர்களில் சராசரியாக 80 முதல் 85 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
இரண்டு வாரத்தில் மறு தேர்வு: எம்.பி.பி.எஸ். முதலாம் ஆண்டு தேர்வில் ஏதாவது ஒரு பாடத்தில் தேர்ச்சி பெறாவிட்டால்கூட, இரண்டாம் ஆண்டுக்கு குறிப்பிட்ட மாணவர் செல்ல முடியாத அளவுக்கு பிரேக் சிஸ்டம் நடைமுறையில் உள்ளது. இந்தப் பிரச்னையைத் தவிர்க்கும் வகையில் தேர்ச்சி அடையாத பாடங்களுக்கான மறு தேர்வை உடனடியாக நடத்தி முடிவை அறிவிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளது.
அதன் அடிப்படையில் தேர்ச்சி அடையாத மாணவர்களுக்கு உதவும் வகையில் மறு தேர்வை இரண்டு வாரங்களுக்குள் நடத்த தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது.
மறு தேர்வு குறித்த அறிவிப்பு வெள்ளிக்கிழமை (அக்.4) வெளியாகும் என்று பல்கலைக்கழக உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.