தமிழ் இனி மெல்ல சாகும் என்றான் பாரதி.எதை நினைத்து சொன்னானோ தெரியாது,ஆனால் இன்று அது உண்மையாகி கொண்டிருக்கிறது. துல்லியமாக சொன்னால் செத்து கொண்டிருக்கிறது என்பதை விட சாகடித்து கொண்டிருக்கிறோம் என்பதே பொருத்தமாக இருக்கும் .
தமிழின் இந்த நிலை குறித்து கேட்டால், மேற்கத்திய கலாச்சார மோகத்தின் காரணமாகவும், பகட்டுக்காகவும் தமிழை இளைய தலைமுறை புறக்கணித்து அழிக்கிறது என்கின்றனர். அதை குறித்து மனதில் தோன்றிய சில கேள்விகளும், விளக்கங்களுமே இந்த வலைப்பதிவு.
இவர்கள் சொல்லும் இளைய தலைமுறையில் நானும் ஒருவன்.
என் பார்வையில் இவர்கள் சொல்வதில் எவ்வளவு நியாயம் இருக்கிறது என்றும்,நமது தலைமுறை தரப்பில் எவ்வளவு தவறுகள் இருக்கிறது என்றும் இங்கே நான் ஆராய்கிறேன்.என் தலைமுறை நண்பர்களுக்கு சில விஷயங்களை அடிகோடிட்டு காட்டிவிட்டு மேலே செல்கிறேன்.
ஜெர்மனியில்,ஒரு பள்ளியில் ஆறாம் வகுப்பு மாணவர்களிடம் ஆசிரியர் உங்களுக்கு எத்தனை மொழிகள் தெரியும் என கேட்டாராம்.ஜெர்மன் மாணவர்கள் ஜெர்மன்,பிரெஞ்சு என அதிகபட்சமாக இரண்டு என பதிலளித்தனர். அவ்வகுப்பில் இருந்த ஒரு புலம் பெயர்ந்த தமிழ் சிறுமி எனக்கு மூன்று மொழிகள் தெரியும் என்றாள்.அவளை பாராட்டிய ஆசிரியர் என்னென்ன என கேட்டார்.அவள் ஆங்கிலம், ஜெர்மன், பிரெஞ்சு என்றாள்.உன் தாய் மொழி என்ன என்று ஆசிரியர் கேட்டார். "தமிழ்" என்றாள் அந்த சிறுமி.நீ சொல்லிய மொழிகளில் தமிழ் இல்லையே என்றார் அவர் .ஆம்,எனக்கு தமிழில் சில வார்த்தைகள் மட்டுமே தெரியும் மற்றபடி மொழி தெரியாது என்றாள் அந்த சிறுமி.
ச்சீ!,தாய் மொழி தெரியாது என சொல்ல உனக்கு வெட்கமாக இல்லையா?.தாய் மொழி தெரியாத நீ மற்ற மொழிகளையும், விஞ்ஞானத்தையும் எப்படி படிப்பாய், எப்படி புரிந்து கொள்வாய் .உன் சிந்தனை ஆற்றல் எப்படி வளரும் என்று திட்டியிருக்கிறார்.
மேலும், உன் தாய் மொழியை கற்று கொள்ளும் வரை என் வகுப்பில் நீ உட்காராதே என்று வெளியில் அனுப்பினாராம்.தாய்மொழியின் மகத்துவத்தை, சிந்தனை ஆற்றலில் அதன் பங்கை அவர் உணர்ந்திருந்தார்.
மேலும்,காந்தியடிகள் தாய் மொழி தெரியாதவர்கள் பற்றி சொல்லும் போது தாய் மொழி தெரியாதவர்கள், அதை படிக்காதவர்கள் பேடிகள் என காட்டமாக சொல்கிறார். தாய்மொழியை புறக்கணிப்பது பெற்ற தாயை புறக்கணிப்பது போன்றது என்கிறார்.
இன்றைய சமுதாயம் இதை எப்போது உணரப் போகிறது?.தமிழ் தெரியாத பேர்களை கூட சில சமயம் மன்னிக்கலாம் ஆனால் தமிழ் தெரிந்து கொண்டே அதில் பேசுவதை அவமானமாக நினைப்பவர்களை என்ன சொல்வது?.
முந்தைய தலைமுறை நமக்கு என்ன விட்டு சென்றது என யோசிக்காமல் ,நாம் அடுத்த தலைமுறைக்கு என்ன விட்டு செல்ல போகிறோம் என யோசித்தால் ஒருவேளை நமக்கு ஞானம் பிறக்கலாம். வருங்கால தலைமுறைக்கு நாம் விட்டு சொல்ல போவது பண்டைய தமிழ் மொழியையும், கலாச்சரதையுமா அல்லது நுனிநாக்கு ஆங்கிலத்தையும், ஹை-ஹீல்ஸ்,டிஸ்கோ,பார் கலாச்சரத்தையுமா என நாம் முடிவு செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.
மற்றொரு கோணத்தில் சிந்தித்தால்,இளைய தலைமுறை தறிகெட்டு திரிகிறது என்று இவர்கள் சொல்லும்போது அதற்கு காரணம் என்ன என்ற ஒரு பெரும் கேள்வி எழுகிறது. தோண்டி துருவி ஆராய்ந்தால் நமது சமுதாயமும் ,இன்று வாய் கிழிய நம்மை குறை சொல்லும் முந்தைய தலைமுறையுமே முக்கிய குற்றவாளிகளாக தெரிகிறார்கள்.
பேடிகள் என தாய்மொழி தெரியாதவர்களை சாடிய காந்தியடிகள், குழந்தையின் உடல் வளர்ச்சிக்கு தாய்ப்பால் எவ்வளவு இன்றியமையாததோ, அதேயளவு அதன் மன வளர்ச்சிக்கு தாய்மொழி இன்றியமையாதது. குழந்தை தன் முதல் பாடத்தைக் கற்பது தாயிடம் இருந்துதான். அப்படியிருக்க, குழந்தையின் உள வளர்ச்சிக்கு தாய் மொழி அன்றி வேறொரு மொழியைத் திணிப்பது தாய் நாட்டுக்குச் செய்யும் பெரிய பாவம், என்றும் சொல்கிறார்.
அது மட்டுமில்லாமல் தாய் மொழியை தாய்பால் என்றும் பிற மொழிகளை புட்டி பால் என்றும் வர்ணிக்கிறார். இங்கு தாய்ப்பாலான தமிழை மறுத்து புட்டி பாலான ஆங்கிலத்தை எங்களுக்கு ஊட்டி நாட்டுக்கு பெரிய பாவம் செய்தவர்கள் யார் என்பதை எங்களை குறை சொல்லுவோர் ஏன் யோசிக்க மறுக்கிறார்கள்.
மொழி ரீதியாக மட்டுமில்லாமல் நடை,உடை,பாவனை,கலாச்சாரம் என அனைத்திலும் ஆங்கிலத்தை முன்னிருத்தியே எங்களை வளர்க்கிறீர்கள். மூன்று வயது ஆகிறதோ இல்லையோ முதலில் எங்களை பள்ளியில் சேர்க்கிறீர்கள்.நீங்கள் எங்களை சேர்ப்பது இளங்கோவடிகள் பாட சாலையோ, அகத்தியன் குரு குலமோ இல்லை மாறாக St.Joseph's higher secondary school, St.peter's higher secondary school என்ற ஏதோவொரு ஆங்கில பள்ளியில் சேர்க்கிறீர்கள்.
கிராமத்து ஏர் உழும் கிழவனின் கோவணத்தை போன்ற துணியை பிஞ்சு கழுத்தில் இறுக்கி "டை" என்றீர்கள். காலிலே எதையோ மாட்டி "ஷூ" என்றீர்கள். அம்மாவை "மம்மி" எனவும் அப்பாவை "டாடி" எனவும் கூப்பிட வைத்தீர்கள். பொம்மைகளோடு விளையாடும் பிஞ்சுகளை நாலு வரி நோட்டில் ஆங்கிலத்தில் எழுத வைத்து விரல்களை ஓடித்தீர்கள்.
"நிலா நிலா ஓடி வா" என பாடும் குழந்தையை ஏளனமாகவும்,"Johnny Johnny Yes,Papa" ,என Johnny என்பது பெயரா இல்லையா என்றே தெரியாமல் பாடும் குழந்தையை பெருமிதத்துடன் பார்த்தீர்கள்.இவ்வாறு பிஞ்சு வயதில் நஞ்சை கலந்து விட்டு மொழி பற்றி இப்பொழுது குமுறுவது வேடிக்கை.இப்படி முட்டாள்தனமாக வேற்று மொழிக்காக மழலைகளின் சிறகொடித்து, விரலோடித்து துன்புறுத்தி அவர்கள் சிரிப்பை தொலைக்கிறீர்கள் .அதிகாலையில் பள்ளி என சொன்னாலே முகம் வாடும் குழந்தைகள் எத்தனை ஆயிரம்?.வாடிய பயிர்களை கண்ட போதெல்லாம் வாடினேன் என்று சொன்ன வள்ளலார் இந்த வாடிய பிஞ்சுகளை கண்டிருந்தால் என்ன ஆகியிருப்பார்?.
இது மட்டுமா,பள்ளியில் நங்கள் ஆங்கிலத்தில் மட்டுமே பேச வேண்டும்,மீறி தமிழில் பேசினால் அபராதம்.எங்களது வாழ்கையின் பெரும்பாலான முதல் 18 ஆண்டுகளை பள்ளியிலே ஆங்கிலத்தில் கழிக்கும் பொது தமிழ் எங்கிருந்து வரும்,எப்படிநாங்கள் தமிழில் சரளமாக பேசுவோம்.
ஐந்தில் வளையாதது ஐம்பதில் எப்படி வளையும். இதை விட வெட்கக்கேடு, தமிழுக்கு 2 ,3 மொழியாக கூட பள்ளிகளில் இடமில்லை. ஹிந்தி, சமஸ்கரிதம், பிரெஞ்சுக்கு உள்ள மரியாதை தமிழுக்கு இல்லை. சில பள்ளிகள் தமிழை போதிப்பதே இல்லை,அப்படி தவறி கற்பிக்க முன் வந்தாலும் நமது மொழி பற்று மிக்க முந்தைய தலைமுறை நம்மை மற்ற மொழிகளை படிக்க வைக்கிறது.
அறிவை கூர்மையாக்கி சிந்தனை ஆற்றலை தூண்ட வேண்டிய பள்ளிகளோ நம்மை அடக்கி ஒடுக்கி எது சரி எது தவறு என்று சிந்திக்க கற்றுக் கொடுக்காமல் புத்தகத்தில் இருப்பதை தேர்வு தாளில் எவ்வளவு நேர்த்தியாய் வாந்தி எடுக்க வேண்டும் என்ற நோக்கிலே போதிக்கின்றன. இப்படி தமிழை காலில் அணியும் காலனியை விட கேவலமாக நடத்தி விட்டு எப்படி மொழி பற்றி இவர்கள் பேசுகிறார்கள் என்று எனக்கு புரியவில்லை.