Showing posts with label Kaveri River. Show all posts
Showing posts with label Kaveri River. Show all posts

Sunday, 7 October 2012

காவிரி நீர்பிடிப்புப் பகுதிகளில் கனமழை: மேட்டூருக்கு நீர் வரத்து அதிகரிப்பு

காவிரி நீர் பிடிப்புப் பகுதிகளில் கனமழை பெய்து வருவதை அடுத்து, மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.
வறட்சியின் பிடியில் சிக்கியுள்ள காவிரி டெல்டா பாசனப் பகுதிகளுக்காக, கர்நாடகத்தில் இருந்து தண்ணீர் திறந்து விட காவிரி நதி நீர் ஆணையம் உத்தரவிட்டது. இதனை எதிர்த்து கர்நாடகாவில் நேற்று முழு அடைப்பு போராட்டம் நடந்த நிலையில், நேற்று மாலை முதலே கர்நாடக தமிழக எல்லைப் பகுதிகளில் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. நேற்று இரவிலும் இன்றும் காவிரி நீர்பிடிப்புப் பகுதிகள் கன மழை பெய்தது.
இதனால், ஒகேனக்கல் பகுதியில் காவிரியில் நீர் வரத்து அதிகரித்தது. கடும் வெள்ளப் பெருக்கின் காரணமாக ஒகேனக்கல் அருவியில் குளிப்பதற்குத் தடை விதிக்கப்பட்டது.
இதை அடுத்து இன்று காலை மேட்டூர் அணைக்கு வரும் நீர் வரத்தும் அதிகரித்தது. விநாடிக்கு 10 ஆயிரம் கன அடியாக இருந்த நீர் வரத்து விநாடிக்கு 26ஆயிரம் அடியாக அதிகரித்தது.
கர்நாடகாவில் உள்ள கபினி, கேஆர்எஸ் அணைகளில் இருந்து 9ஆயிரம் கன அடி நீர் மட்டுமே திறந்து விடப்படும் நிலையில், கர்நாடக தமிழக எல்லையில் உள்ள காவிரி நீர்பிடிப்புப் பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக நீர் வரத்து அதிகரித்துள்ளது. இது மழை நின்றபிறகு குறைந்துவிடும். என்றாலும், இன்று மதியம் மேட்டூர் அணை நீர்மட்டம் 70.8 அடியாக இருந்தது; நீர் இருப்பு 33.3 டி.எம்.சி. என்ற அளவில் இருந்தது.
ஒவ்வொரு முறையும் காவிரியில் தண்ணீருக்காக இரு மாநிலங்களுக்கு இடையே மோதல் அதிகரிப்பதும், தீர்வு எதுவும் கிட்டாமல் பிரச்னை அதிகரிக்கும் நிலையில், காவிரி நீர் பிடிப்புப் பகுதியில் கனமழை பெய்து, சூடான நிலையை தணித்துவிடுவதும் வழக்கமாகிவிட்டது என்கின்றனர் விவசாயிகள். இந்த முறையும், மழை பெய்து, நேற்றைய கர்நாடக முழு அடைப்பு பதற்றத்தையும், டெல்டா விவசாயிகளின் குமுறலையும் அடக்கிவிடும் நிலை ஏற்பட்டுள்ளது. இருப்பினும், மேட்டூர் அணைக்கு தீடீர் நீர் வரத்து அதிகரிப்பு விவசாயிகளையும் பொதுப்பணித்துறை அதிகாரிகளையும் ஒருங்கே மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.