Thursday, 18 July 2013

கவிஞர் வாலி இன்று மாலை சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் காலமானார்.


தமிழ் திரைப்பட பாடலாசிரியர் கவிஞர் வாலி இன்று மாலை சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 82.

நுரையீரல் தொற்றுநோய் காரணமாக கடந்த சில நாட்களாக சிகிச்சை பெற்றுவந்த அவருக்கு சுவாச கோளாறு ஏற்பட்டது.

இதனையடுத்து, செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வந்த அவருக்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தனர்.

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

மறைந்த வாலிக்கு திரை உலகினரும் அரசியல் தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

கவிஞர் வாலி - வரலாறு

 வாலிபக் கவிஞர்.... காவியக் கவிஞர் என்றும் அழைக்கப்படும் கவிஞர் வாலி கடந்த 1931 ஆம் ஆண்டு திருச்சி மாவட்டம் திருப்பராய்த்துறையில் பிறந்தார்.

வாலிக்கு பெற்றோர் வைத்த பெயர் ரங்கராஜன்.

சிறு வயதில் ஓவியம் வரைவதில் மிகுந்த ஈடுபாடு காட்டிய அவர், ஓவியர் மாலி என்பவரின் மேல் கொண்ட மதிப்பால் தன்னுடைய பெயரை வாலி என்று மாற்றிக் கொண்டார்.

ஆரம்ப காலங்களில் திருச்சி வானொலியில் பணியாற்றியபோது, அவர் எழுதிய கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன் என்ற பாடல் மிகவும் பிரபலமானது.

இந்தப் பாடல் கொடுத்த புகழ் தான் திரைப்படங்களில் பாட்டெழுத வேண்டும் என்ற ஆசையை வாலியின் மனத்தில் விதைத்தது என்றே சொல்லலாம்.

இதை அடுத்து சென்னைக்கு வந்த வாலி, கடந்த 1958 ஆண்டு நிலவும் தாரையும் நீயம்மா , இந்த உலகம் ஒரு நாள் உனதம்மா என்ற தன் முதல் பாடலை எழுதினார்.

இதற்குப் பிறகு அவர் தொடர்ந்து பாடல்கள் எழுதி வந்தாலும் விஸ்வநாதன் - ராமமூர்த்தி இசையில் 1963 ஆம் ஆண்டு வெளிவந்த கற்பகம் திரைப்படம் தான் அவரது வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்தது.

இதற்குப் பிறகு பல பாடல்களை வாலி எழுதி வந்தாலும், எம்.ஜி.ஆரின் அரசியல் கொள்கைகளைப் பரப்பும் விதமாக பல பாடல்களை எழுதும் கவிஞராக உருவெடுத்தார் கவிஞர் வாலி .

எம்.ஜி.ஆர் மட்டுமின்றி சிவாஜி கணேசனுக்கும் ஏராளமான வெற்றிப் பாடல்களை எழுதியுள்ளார் வாலி.

அடுத்த தலைமுறை நடிகர்களான ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகிய நடிகர்களுக்கும் பல வெற்றிப் பாடல்களை எழுதியுள்ளார் கவிஞர் வாலி.

இது மட்டுமின்றி கமல்ஹாசன் நடித்த பல படங்களுக்கும் வாலி பாடல்கள் எழுதியிருந்தாலும் அபூர்வ சகோதரர்கள் என்ற படத்தில் இடம்பெற்ற உன்னை நினைச்சேன் பாட்டுப் படிச்சேன் என்ற பாடல் தேசிய விருதைப் பெற்றது.

இதற்குப் பிறகு விஜய், அஜித், சூர்யா, சிம்பு, தனுஷ் பல நடிகர்களுக்கு வெற்றிப் பாடல்களை எழுதியுள்ளார் கவிஞர் வாலி.

கடந்த 50 ஆண்டுகளில் 15,000க்கும் மேற்பட்ட பாடல்கள் எழுதி சாதனை படைத்துள்ளார்.

பல பாடல்களுக்கு விமர்சிக்கப்பட்டாலும், அந்தந்த கால கட்டங்களுக்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொண்டும், புது விஷயங்களைக் கற்றுக் கொண்டும் ஜனரஞ்சகப் பாடல்களை படைத்த கவிஞர் வாலி எனப் புகழாரம் சூட்டுகிறது திரையுலகம்.

சினிமா என்பது ஒருபக்கம் என்றாலும், அவதார புருஷன், பாண்டவர் பூமி, இராமானுஜ காவியம் என பல கவிதை நூல்களை எழுதியுள்ளார் கவிஞர் வாலி.

கவிதை, பாடல் என்பது மட்டுமின்றி பொய்க்கால் குதிரை, ஹே ராம், பார்த்தாலே பரவசம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார் கவிஞர் வாலி.

தமிழ்நாட்டின் சிறந்த பாடலாசிரியருக்கான மாநில விருதை 5 முறை பெற்றுள்ள கவிஞர் வாலிக்கு, கடந்த 2007 ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருது வழங்கி கெளரவித்தது இந்திய அரசு.

இன்று அவர் மறைந்திருந்தாலும், காற்று மண்டலத்தில் உலா வரும் அவரது பாடல்கள் என்றென்றும் அவர் புகழை நீடித்து நிற்கச் செய்யும் என்பது மறுக்க முடியாத உண்மை.

Sunday, 28 April 2013

பிளஸ் 2 தேர்வு எழுதிய மாணவர்களுக்கான ரிசல்ட் மே 9-ந் தேதியன்றும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவர்களுக்கான ரிசல்ட் மே 31-ந் தேதியன்றும் வெளியாகும் என்று தமிழக அரசு

சென்னை: பிளஸ் 2 தேர்வு எழுதிய மாணவர்களுக்கான ரிசல்ட் மே 9-ந் தேதியன்றும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவர்களுக்கான ரிசல்ட் மே 31-ந் தேதியன்றும் வெளியாகும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழக அரசு இன்று வெளிட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையில் தேர்வு முடிவுகளின் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழகம், புதுச்சேரியில் கடந்த மார்ச் 1-ந் தேதி தொடங்கி மார்ச் 27-ந் தேதி வரை நடைபெற்றது. இத் தேர்வில் 8 லட்சத்து 4 ஆயிரத்து 534 பேர் எழுதினர். 2,020 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 9-ந் தேதியன்று வெளியிடப்படுகிறது. தமிழகம், புதுச்சேரியில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் 27-ந் தேதியன்று தொடங்கி ஏப்ரல் 12-ந் தேதி வரை தமிழகம் முழுவதும் நடைபெற்றது. தமிழகம், புதுச்சேரியை சேர்ந்த 11,359 பள்ளிகளை சேர்ந்த 10 லட்சத்து 69501 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். இதற்காக 3013 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 5 லட்சத்து 43 ஆயிரத்து 511 மாணவர்களும், 5 லட்சத்து 25 ஆயிரத்து 990 மாணவியரும் எழுதியிருந்தனர். இவர்களுக்கான தேர்வு முடிவு மே 31-ந் தேதியன்று வெளியிடப்படுகிறது.


+2 தேர்வு முடிவுகள் வரும் மே 9 ஆம் தேதி காலை 1௦ மணிக்கும், பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 31 ஆம் தேதி காலை 9.15 க்கும் வெளியிடப்படும் என தமிழ்நாடு தேர்வுத் துறை இயக்குநர் தெரவித்துள்ளார்.

தேர்வு முடிவுகள் இவ்வாண்டு தமிழக அரசின் கல்வித்துறை இணையதளங்களில் மட்டுமே வெளியிடப்படும்.

Monday, 15 April 2013

அண்ணாமலைப் பல்கலைக்கழக வளாகத்தில் ஆசிரியர், ஊழியர் சங்கத்தினர் வெடி, வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர்

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தை அரசு கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர தமிழக சட்டப்பேரவையில் மசோதா தாக்கல் செய்யப்பட்டதை அடுத்த அண்ணாமலைப் பல்கலைக்கழக வளாகத்தில் ஆசிரியர், ஊழியர் சங்கத்தினர் வெடி, வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
பல்கலைக்கழக ஆசிரியர்-ஊழியர் சங்க கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் உதயசந்திரன், துணை ஒருங்கிணைப்பாளர் சி.மதியழகன், ஊழியர் சங்க பொதுச்செயலாளர் ரவி ஆகியோர் தலைமையில் பல்கலைக்கழக ஆசிரியர், ஊழியர்கள் நிர்வாகத்திற்கு எதிரான கோஷங்களுடன் ஊர்வலமாக சென்று நிர்வாக அலுவலகக் கட்டடம், பூமா கோயில், ஊழியர் சங்க அலுவலக கட்டடம் ஆகியவற்றின் முன்பு வெடி, வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர். பின்னர் பல்கலைக்கழக பூமா கோயில் முன்பு ஆசிரியர்- ஊழியர் சங்க கூட்டமைப்பின் பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.

Sunday, 7 April 2013

புதிய தலைமுறைத் தமிழன் விருதுகள் -2013

தமிழ் இலக்கியம், கலை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சாதனை படைத்த தமிழர்களை கவுரவிக்கும் வகையில் புதிய தலைமுறைத் தமிழன் விருதுகள் இன்று வழங்கப்பட்டன. சென்னையில் நடைபெற்ற வண்ணமயமான விழாவில், கவிக்கோ அப்துல்ரஹ்மான், நடிகர் கமல்ஹாசன், டாக்டர் சிவதாணுப்பிள்ளை உள்ளிட்ட 12 பேருக்கு விருதுகள் வழங்கி கெளரவிக்கப்பட்டன. 

தமிழகத்தின் பெருமையை உலக அரங்கில் உயர்த்திப் பிடித்த, பல்வேறு துறைகளைச் சேர்ந்த சாதனைத் தமிழர்களை ஆண்டுதோறும் தேர்வு செய்து, விருதுகளை வழங்கிச் சிறப்பித்து வருகிறது புதியதலைமுறை. இரண்டாம் ஆண்டாக இந்தாண்டும் விருதுக்கு உரியவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இதற்கான விழா சென்னை நந்தம்பாக்கம் வணிக மையத்தில், கலை நேர்த்தியுடன் கட்டமைக்கப்பட்ட பிரம்மாண்டக் கலையரங்கில் இன்று நடைபெற்றது.

இதில், கலை, விளையாட்டு, இலக்கியம், அறிவியல், வணிகம், சமூகசேவை ஆகிய 6 பிரிவுகளில் சாதனை படைத்த தமிழர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. ஒவ்வொரு பிரிவிலும் சாதனையாளர்களுக்கான வாக்குகள் நேரடியாகவும், தொலைபேசி, குறுஞ்செய்தி மற்றும் இணையதளம் வழியாகவும் பெறப்பட்டன.

அதிக வாக்குகளின் அடிப்படையில் ஒவ்வொரு பிரிவுக்கான சாதனையாளர்களையும் விருதுக்குழு தேர்வு செய்தது. அதேபோல, 6 பிரிவுகளிலும் நம்பிக்கை அளிக்கக் கூடிய இளம் சாதனையாளர்கள், நம்பிக்கை நட்சத்திரம் விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டனர்.

தொழில் துறை

தொழில்துறையின் சாதனைத் தமிழராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள முருகப்பா குழுமத்தைச் சேர்ந்த வெள்ளையனுக்கு புதிய தலைமுறையின் தமிழன் விருது வழங்கப்பட்டது. இந்தத் துறையின் நம்பிக்கை நட்சத்திரமாக கண்டெய்னரை வசிப்பிடமாக மாற்றித் தொழில் பயன்பாட்டுக்குக் கொண்டுவந்த வான்மதி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இலக்கியம்

தமிழ் இலக்கியத் துறைக்கான சாதனைத் தமிழர் விருது கவிக்கோ அப்துல் ரஹ்மானுக்கு வழங்கப்பட்டது. இந்தத் துறையின் நம்பிக்கை நட்சத்திரத்துக்கான விருதை தமிழ்ச்செல்வி பெற்றார்.

விளையாட்டுத்துறை

விளையாட்டுத் துறையின் சாதனைத் தமிழருக்கான விருது ஹாக்கி வீரர் தன்ராஜ் பிள்ளைக்கு வழங்கப்பட்டது. இந்தத் துறையின் நம்பிக்கை நட்சத்திரமாக கால்பந்து வீராங்கனை ராதிகா தேர்ந்தெடுக்கப்பட்டு விருது வழங்கிச் சிறப்பிக்கப்பட்டார்.

சமூக சேவை 


சமூகசேவையில் சாதனை படைத்த தமிழராக நிலமற்ற ஏழை விவசாயிகளுக்காகப் போராடி வரும் கிருஷ்ணம்மாள் ஜெகநாதன் தேர்வு செய்யப்பட்டு, விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார். இந்தத் துறையின் நம்பிக்கை நட்சத்திரத்துக்கான விருது ஏரிகளைச் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு வரும் அருண் கிருஷ்ணமூர்த்திக்கு வழங்கப்பட்டது.

அறிவியல் - தொழில்நுட்பம்

அறிவியல் துறையில் சாதனை படைத்த தமிழராக டாக்டர் சிவதாணு பிள்ளை தேர்வு செய்யப்பட்டுள்ளார். இத்துறையின் நம்பிக்கை நட்சத்திர விருதை சிறிய ரக டிராக்டர்களை வடிவமைத்த ரங்கசாமி பெற்றார்.

கலைத்துறை 


கலைத்துறையின் சாதனைத் தமிழராக நடிகர் கமல்ஹாசன் கௌரவிக்கப்பட்டார். இந்தத் துறையின் நம்பிக்கை நட்சத்திரமாக வீதி நாடகக் கலைஞர் சந்திரன் தேர்வு செய்யப்பட்டார்.

Sunday, 31 March 2013

திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில்

திருநெல்வேலி நகரின் மைய பகுதியில் உள்ளது அருள்மிகு நெல்லையப்பர் கோவில் . இறைவன் திருநாமம் நெல்லையப்பர் .அம்மன் திருநாமம் காந்திமதி . ஸ்தல வரலாறு படி ஒரு சிவ பக்தன் தினமும் வீடு வீடாக சென்று பெற்று வந்த நெல்லை இறைவன் நைவேதியத்துக்கு கொடுப்பது வழக்கம் .இப்படி சேகரித்த நெல்லை சன்னதி முன் உலரவிட்ட பின் அவர் குளிக்க செல்வது வழக்கம் .
ஒரு நாள் அவ்வாறு குளிக்க சென்ற பொழுது திடீரென்று மழை பெய்திருக்கிறது.நெல நனைந்து விடுமே என்ற பதட்டத்தில் பக்தன் வேகமாக வந்த பார்த்த பொழுது ஒரு அதிசயத்தை கண்டார்.நெல் உலருவதற்கு போட்டிருந்த  இடத்தில் மட்டும் மழை பெய்யவில்லை .அதை சுற்றி மட்டும் மழை பெய்திருந்தது .நெல் உலர்த்திய இடத்தில் வெயில் அடித்தது . இறைவன் நெல்லுக்கு வேலி அமைத்து காத்ததினால் இந்த நகருக்கு திருநெல்வேலி என்ற காரண பெயர் வந்தது.அதுவரை இந்த ஸ்தலத்தின் பெயர்  வேணுவனம் என்று இருந்ததாக வரலாறு .இன்னொரு சிறப்பு சிவபெருமான் நடராச பெருமானாக நடனமாடிய ஐந்து திருசபைகளில் ,இதுவும் ஓன்று .நெல்லைஅப்பர் கோவில் தாமிரை சபை என்று அழைக்க படுகிறது .இங்கும் மதுரை மீனாக்ஷி கோவிலில் உள்ளது போல ஒரு ஆயிரம் கால் மண்டபம் உள்ளது .ஆண்டுதோறும் அம்மன் திருகல்யாணம் இந்த மண்டபத்தில் நடைபெறும் .இரண்டாவது பிரகாரத்தில் தாமிரை சபை உள்ளது .மூன்றாவது பிரகாரத்தில் முரக பெருமானுக்கு தனி சன்னதி உண்டு.மயில் அமர்ந்த கோலத்தில் பெருமான் வள்ளி தெய்வானை சமேதராக காட்சி தருகிறார்.இன்னொரு சிறப்பு தமிழகம் எங்கும் உள்ள கோவில்களில் மார்கழி மாதம் அதிகாலை 4 மணிக்கே திறந்து சிறப்பு பூஜைகள் நடைபெறும் .அனால் நெல்லையப்பர் கோவிலில் மார்கழி சிறப்பு ஆராதனைகள் இல்லை.அதற்க்கு பதில் கார்த்திகை மாதம் முழுவதும் அதிகாலை 4 மணிக்கே திறந்து சிறப்பு ஆராதனைகள் செய்யபடுகிறது.


ஸ்ரீ காந்திமதி நெல்லையப்பர் ஆலயம் தென் வடலாக 756 அடி நீளமும், மேற்கு கிழக்காக 378 அடி அகலமும் கொண்டு ஆசியாவிலேயே மிகப்பெரிய சிவாலயமாக உள்ளது.[1]அம்பாளுக்கும் சுவாமிக்கும் தனித்தனியே கோவில்கள் எழுப்பப்பட்டு, இடையே அழகிய கல் மண்டபம் கொண்டு இணைக்கப்பட்டுள்ளது. அம்பாள் சன்னதியில் ஆயிரம் கால் மண்டபம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. கோயிலில் நுழைந்தவுடன் 10 அடி உயரத்திற்கு மேலாக ஒரு அழகான வெள்ளை நிற நந்தி சிலை உள்ளது.

கொடிமரத்தைச் சுற்றிவிட்டு உள்ளே சென்றால் மூலவர் சிலை உள்ளது. அதற்கு முன்பு மிகப்பெரிய ஆனைமுகன் சிலை உள்ளது. சுமார் 9 அடி இருக்கும். மூலவரைச் சுற்றி 3 பிரகாரங்கள் உண்டு. முதல் பிரகாரத்தில் எல்லாக் கோயில்களையும் போல தக்ஷிணாமூர்த்தி, சண்டிகேஸ்வரர், மகிஷாசுரமர்த்தினி, பைரவர் சன்னிதிகள் அமைந்துள்ளன. கோவிந்தப் பெருமாள், சிவனுக்கு அருகிலேயே சயனித்திருப்பார். இது சைவ வைணவ ஓற்றுமைக்கு ஓர் எடுத்துக்காட்டு.
நெல்லையப்பர் கோவில் பிரகாரத்திலுள்ள இசைத் தூண்கள்இரண்டாவது பிரகாரம் சற்றுப் பெரியது. ஆரம்பத்திலேயேஏழிசை ஸ்வரங்கள் இசைக்கும் தூண்கள்உள்ளன. இவற்றைத் தட்டிப் பார்த்தால் ஸ்வரங்களின் ஒலி கேட்கும். இந்தப் பிரகாரத்தில் தான்தாமிர சபைஉள்ளது. 63 நாயன்மார்களின் சிலைகள், அஷ்ட லக்ஷ்மி, சனீஸ்வரர், சகஸ்ரலிங்கம் ஆகிய சிலைகளும் இருக்கின்றன.

மூன்றாவது பிரகாரம் மிகப் பெரியது. மிக அகலமானது. இப்பிரகாரத்திலிருந்து அம்மா மண்டபம் வழியாக அம்மன் சந்நிதி செல்வதற்கு வழி அமைக்கப்பட்டுள்ளது. இங்கு ஆஞ்சநேயர், ஐயப்பன், மஞ்சனத்தி அம்மன், சரஸ்வதி, பிரம்மா ஆகியோர்க்கு தனிச் சந்நிதிகள் உண்டு. கோயிலின் உள்ளே மிகப் பெரிய உள் தெப்பம் ஒன்று உள்ளது. இதுபோல் கோயிலுக்கு வெளியே அரை கிலோமீட்டர் தூரத்தில் வெளித்தெப்பம் ஒன்றும் உள்ளது.